Saturday, January 08, 2005

சுசீலாவுக்கும்....அமுதென்று பேர்.....

சுசீலாவின் குரல் .....
சுந்தரத் தமிழின் வரம்!

சந்தனத் தென்றலின் தரம்!
நந்தவன சுகம்!

*****

பாடுவது .... நம் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வோடு
கேட்பவரை ஐக்கியப் படுத்தும்
பாட்டு பந்தம்! ஜீவ சொந்தம்!

*****
டி. எம். எஸ் மாதிரி நட்சத்திரங்களுக்கு ஏற்ப
குரல் மாற்றிப் பாடத்தெரியாத குயில்!
எல்லோருக்கும் ஒரே குரல்தான்!!

ஆனாலும்..... ஆடாது அசையாது நின்று பாடியபடி ....
பத்மினியே பாடுவது போலவும்
சாவித்திரியே பாடுவது போலவும்

விஜயகுமாரியே பாடுவது போலவும்
ஜெயலலிதாவே பாடுவது போலவும்
கே. ஆர். விஜயாவே பாடுவது போலவும்

நேயர் நெஞ்சங்களில் ஒரு பாட்டு பிரமையை
கூட்டி வந்தாரே...

எப்படி நேர்ந்தது இந்த இசை அற்புதம்?!

*****
எனக்கொரு சங்கீத சந்தேகம்!

சுசீலா .... தமிழிடமிருந்து
இனிமையை வாங்கி நமக்குத் தருகிறாரா?

இல்லை .... இவரிடம் இருக்கும் இனிமையை
தமிழ் .... இனங்காட்டித் தருகிறதா?!

*****
ஒருமுறை -
'சுசீலாவின் சுந்தர கீதங்கள்' என்ற வானொலி நிகழ்ச்சியை யான்
தொகுத்து வழங்க நேர்ந்த போது ....
அவர் தேனமுதப் பாடல்களை தேர்ந்தெடுக்க
ஒரு பாடல் பதிவகம் போயிருந்தேன்.

அவர் பாட்டு மலர்களின் பட்டியலை பாடல் பதிவாளர் என்னிடம் காட்டினார்.

அதில் எதை எடுப்பது ? எதைத் தொடுப்பது? என்ற
சங்கீதக் குழப்பத்தில் யான் மூழ்கியபோது ....

அவர் புலமையின் ஆழமும், பாடல் முத்துக்களின் வசீகரமும்
மறுபடியும் மறுபடியும் என்னை பிரமிக்கச் செய்தன!

*****
"சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" (எங்கிருந்தோ வந்தாள்)
பாடலின் துவக்கத்தில்
சங்கீதச் சிரிப்பால் அவர் கட்டிச்செல்லும் சிங்காரத் தோரணம் ....

"தமிழுக்கும் அமுதென்று பேர்" (பஞ்சவர்ணக்கிளி)
பாடலை அவர் பாடி முடிக்கும் போது ....
"சுசீலாவுக்கும் அமுதென்று பேர்" என்று
எங்களைச் சொல்ல வைத்த சுந்தரம் ....

*****
"கலைமகள் கைப்பொருளே"(வசந்த மாளிகை)
"எண்ணப் பறவை சிறகடித்து" (கார்த்திகை தீபம்)
"கண்ணிலே அன்பிருந்தால்" .... பாடல்களில்

அவர் குரலிலே மிளிரும்
விலை மதிக்க முடியாத கருணை ....

*****
"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு" (சவாலே சமாளி) பாடலில்
எட்டிக் குதிக்கும் குயில் குதூகலம் ....

*****
"ஓராயிரம்" ....(சுமதி என் சுந்தரி) பாடலின்
ஆரம்ப ஆலாபனையில் கொடி நாட்டி.....
இறுதிவரை ராஜாங்கம் நடத்தும் பெருமிதம் ....

*****
"ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி" (நம் நாடு) பாடலின்
தொடக்க ஆலாபனையில்
தாளத்தோடு துள்ளிக் குதிக்கும் வெல்ல நடை ....

*****
"சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" (ராமன் எத்தனை ராமனடி) பாடலில்
முத்திரை பதிக்கும் நதியோட்டம் ...

*****
'பஞ்சவர்ணக்கிளி' படத்தில் இடம்பெற்ற
"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்"

'ராமு' படத்தில் பாசம் கொஞ்சிய "பச்சை மரம் ஒன்று" ....
"முத்துச்சிப்பி மெல்ல மெல்ல" ...
அன்னமிட்டகை படத்தில் தாலாட்டிய "பதினாறு வயதினிலே"
தாமரை நெஞ்சம் படத்தில் சீராட்டிய "ஆலயம் என்பது வீடாகும்"
கண்ணே பாப்பா படத்தில் கனிந்த "கண்ணே பாப்பா" ....

சாந்தி நிலையம் படத்தில் பொழிந்த "செல்வங்களே" ....
"இறைவன் வருவான்" .... "கடவுள் ஒருநாள்" .... ஆகிய பாச மழைகள்....

(எனக்கும் ஒரு தமக்கை இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ)

*****
"கையோடு கை சேர்க்கும் காலங்களே" (காவியத் தலைவி)
"வசந்தத்தில் ஓர் நாள்"( மூன்று தெய்வங்கள்)
"மீனே மீனே மீனம்மா" (என் கடமை) ....பாடல்களில்
கனவுகளுக்கு வண்ணம் தீட்டும் குரல் தூரிகை ....

*****
டி. எம். எஸ். பாடும் "வெள்ளிக் கிண்ணம்தான்" (உயர்ந்த மனிதன்) பாடலில் ...
ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்காமல்
ஆலாபனையை மாத்திரம் வைத்துக் கொண்டே

சௌந்தர ராஜன் குரலுக்கு சமமான சங்கீத அந்தஸ்தை
அந்தப் பாட்டிலே கொண்டு வந்த இசைப் புலமை ....

வழமையான பாணியில் இருந்து விலகிச்சென்று பாடிய
"தேடினேன் வந்தது" (ஊட்டி வரை உறவு)
"இன்று வந்த இன்ப மயக்கம்" ( காசேதான் கடவுளடா)

"ஆண்டவனின் தோட்டத்திலே" (அரங்கேற்றம்)
"அம்மம்மா காற்று வந்து" (வெண்ணிற ஆடை)
டார்லிங்க்..டார்லிங்க்..[பிரியா]...... பாடல்களால்
தூவிச்சென்ற ராக போதை ....

*****
""மலர் எது" (அவளுக்கென்று ஓர் மனம்) பாடலில் மலர்ந்த சங்கீத வசந்தம் ....

*****
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல"(இதயக் கமலம்) பாடலில்
ஓங்கி ஒளிர்ந்த தெய்வீகக் காதல் ....

*****
"திருமகள் தேடிவந்தாள்" (இருளும் ஒளியும்) பாடலில் பெருகி வழிந்த பூரிப்பு ....

*****
"இளமை கொலுவிருக்கும்" (ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்) பாடலில் கொலுவிருந்த இனிமை..

*****
கண்ணா..கருமை நிறம் கண்ணா..[நானும் ஒரு பெண்]
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா [ராதா]
நினைக்கத் தெரிந்த மனமே..[ஆனந்த ஜோதி]
மன்னவனே அழலாமா? [கற்பகம்]

"காலமகள் மடியினிலே" (ஓடும் நதி),
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" (சித்தி)
பாடல்களில் காட்டிய
உருகாதவரையும் உருக வைக்கும் திருவாசக நேர்த்தி ....

*****
"நான் உன்னைத் தேடுகிறேன்" (புகுந்த வீடு),
"எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா" (பூவும் பொட்டும்),
"உன்னை ஒன்று கேட்பேன்", "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து" (புதிய பறவை),
"என்னைப் பாட வைத்தவன் ஒருவன்" (அரச கட்டளை),

"ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே" (நீல வானம்),
"மானாட்டம் தங்க மயிலாட்டம்" (ஆலய மணி),
"மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ" (பணமா பாசமா) பாடல்களில்
ஊறி வந்த ஊஞ்சல் உற்சாகம் ....

*****
"வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்" (அவசரக் கல்யாணம்),
"பால் போலவே வான்மீதிலே" (உயர்ந்த மனிதன்),
"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே" (கனிமுத்துப் பாப்பா) பாடல்களில்
குழலோசையாய் குழைந்து வந்த எழிலோசை ....

*****
"விளக்கேற்றி வைக்கிறேன்" (சூதாட்டம்)
"வெள்ளிக் கிழமை விடியும் வேளை" (நீ)
"எங்கே நீயோ" (நெஞ்சிருக்கும் வரை)

"வெள்ளி மணி ஓசையிலே" (இரு மலர்கள்)
"மலர்கள் நனைந்தன பனியாலே" (இதயக் கமலம்)
"சரவணப் பொய்கையில் நீராடி" (இது சத்தியம்)

"மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு" (முகூர்த்த நாள்)
"ராமன் எத்தனை ராமனடி" (லட்சுமி கல்யாணம்)
"தித்திக்கும் பாலெடுத்து" (தாமரை நெஞ்சம்)....
மலரும் மங்கையும் ஒரு ஜாதி [அன்னையும் பிதாவும்]...பாடல்களில்
அவர் மதுரக் குரலில் மலர்ந்த 'மகாலட்சுமி' களை ....

*****
"தாயின் முகமின்று நிழலாடுது" (தங்கைக்காக)
"தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா" (சரஸ்வதி சபதம்)
"பூஞ்சிட்டுக் கன்னங்கள்" (துலாபாரம்)

"கண்ணா கருமை நிறம் கண்ணா" (நானும் ஒரு பெண்)
"இறைவா உன் மாளிகையில்" (ஒளி விளக்கு)
"பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" பாடல்களால்
காற்றில் கசிந்த ஈரம் ....

*****
சுசீலா .... தமிழிடமிருந்து
இனிமையை வாங்கி நமக்குத் தருகிறாரா?

இல்லை .... இவரிடம் இருக்கும் இனிமையை
தமிழ் .... இனங்காட்டித் தருகிறதா?!


- யாழ் சுதாகர்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR